×

தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் கலைஞருடன் நெருங்கி நட்பு பாராட்டியவர் அவ்வை நடராஜன். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன்(87) உயிரிழந்தார். சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். சென்னை, அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  

*முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ் அன்னையும் தேம்பி அழும் இழப்பு என அவ்வை நடராசன் மறைவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், தமிழாய்ந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் நம்மைவிட்டு பிரிந்தார் எனும் துயர்மிகு செய்தியால் வாடி நிற்கிறோம். காவல்துறை மரியாதையுடன் அவரது நிகழ்வுகள் நடைபெறும். தமிழுள்ள வரை அவரது புகழ் நம்மிடையே நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்

*மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். முதுபெரும் தமிழறிஞர் மற்றும் தமிழாசிரியச் சேவையின் பல்வேறு நிலைகளில் இடையறாது அவ்வை நடராசன் பணியாற்றியவர். எண்ணற்கரிய தமிழ் மாணாக்கர்களையும், முனைவர்களையும் உருவாக்கிய பெரும்பேராசிரியர் அவ்வை நடராசன் என அவர் கூறினார்.   

*பாரிவேந்தர்

அவ்வை நடராசனின் பிரிவு தமிழ் உலகத்திற்கே பேரிழப்பாகும் என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். கம்பீரமான குரலால் கேட்பவர் உள்ளங்களை பிணித்து வைக்கும் பேராற்றல் அவ்வை நடராசனுக்கு உண்டு. அவ்வை நடராசன் பங்கேற்காத இலக்கிய அமைப்புகளே தமிழகத்தில் இல்லை என பாரிவேந்தர் எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார்.

*முத்தரசன்

தமிழாய்வு உலகில் பிரகாசித்து வந்த ஒரு சுடரொளி மறைந்து விட்டது என அவ்வை நடராஜன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் ஆய்வு அமைப்புகளில் பொறுப்பேற்று தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் அவ்வை நடராஜன் எனவும் முத்தரசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

*ஓ.பன்னீர்செல்வம்

தலை சிறந்த தமிழறிஞர் அன்புச் சகோதரர் முனைவர் அவ்வை நடராஜன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தமிழ் பேராசிரியர், துணை இயக்குநர், மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் என பல பதவிகளை வகித்ததோடு, எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்திலே தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமலேயே அரசுச் செயலாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர் அவ்வை நடராஜன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


Tags : Avvai Natarajan , Political party leaders condole death of Tamil scholar Avvai Natarajan
× RELATED உடல்நலக் குறைவால் காலமான தமிழறிஞர்...